அதென்னவோ தெரியல தீடிர்னு ஊர்ல எல்லா பக்கமும் வெயில் காலத்துல தர்பீஸ் கடைகள் முளைக்கிற மாதிரி எல்லாப் பகுதியிலும் தேநீர் கடைகள் முளைத்து வருகிறது. இவையெல்லாம் பாரம்பரியமான (பித்தளை கொதிநீர் கலன்) கடைகளாக அல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் கிளைக் கடைக்களாக இருக்கிறது. Tea Time, Tea Boy, Tea House, Tea Bench, Cup Tea, Master Tea, கருப்பட்டி காபி, தந்தூரி டீ, சித்தரா காபி பார் எனப் பல நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் தங்கள் கிளைகளை பரப்பி வருகிறது. அந்த நிறுவனங்களின் கடையை யார் வேண்டுமானாலும் தனியாகவோ கூட்டாகவோ முன் தொகை கட்டி franchise அடிப்படையில் எடுத்து நடத்தலாம். தொழில் முனைவோர் பலருக்கு இந்த தொழில் நல்லாதொரு வாய்ப்பாக அமைகிறது.
தேநீரை அமர்ந்து பருக மேசை நாற்காலிகள், வித்தியாசமான தேநீர் வகைகள், பல வகையான தின்பண்டங்கள், குளிர் ஆகாரங்கள், செல்பி எடுப்பதற்கு ஏற்றவாறு பளிச்சென்று இருக்கும் கடையின் தோற்றம் எனப் பாரம்பரிய கடைகளுடன் ஒப்பிடுகையில் பல சிறப்பம்சங்களை இந்த புதிய தேநீர் கடைக்கள் பெற்றுள்ளது. அதே சமயம் சில நிறுவனங்களின் தேநீர் அந்த அளவுக்கு ருசியாக இல்லையே என தோன்றவும் வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை 10 ரூபாய் என்பதே ஒரு தேநீரின் சராசரி விலையாகும். ஆனால் இந்த புதிய நிறுவனத்தின் ஒரு கடையின் வெளியே பலகையில் 10 ரூபாய்க்கு தேநீர் என விளம்பர படுத்திவிட்டு 15 ரூபாய்க்கு விற்றார்கள். என்னவென்று பார்த்தால் அந்த பலகையின் கீழே சிறிதாக 'small cup - 10₹,' எனப் போட்டுள்ளார்கள், * Terms & Condition apply மாதிரி.
இப்படி பல நிறுவனங்கள் வந்திருந்தாலும் வேலூரை மையமாக கொண்ட "சித்ரா காபி பார்" சிறந்த தேநீரை வழங்குவதாக இருக்கிறது. என்னதான் இது ஒரு கிளை நிறுவனமான இருந்தாலும் அதன் சுவை உள்ளூர் தேநீரை போலவும் வீட்டு தேநீரை போலவும் சுவைக்கும் மனதிற்கும் நெருக்கமாக இருக்கிறது. இந்தக் கடையில் ஏலக்காய், மசாலா, இஞ்சி என ஆரம்பித்து கற்பூரவல்லி, புதினா என பல வகையான தேநீர்கள் சிறப்பாக இருக்கிறது. இங்கே இருக்கும் 'லெமன் டீ + தேன்(சர்க்கரைக்கு பதில்)' தனித்துவமாக இருக்கிறது.
இப்படி பெருகி வரும் தேநீர் நிறுவனங்களால் ஏற்கனவே ஊரில் அந்த அந்த பகுதியில் இருக்கும் தேநீர் கடைகள் சற்று தொய்வை சந்திக்கிறதை தெளிவாக பார்க்க முடிகிறது. அப்படி இருந்தும் தன் சுவையாலும் மன நிறைவை தரும் உள்ளூர் தேநீர் கடைகள் பலத்த போட்டிக்கிடையில் வெற்றிகரமாக இயங்கி வருவதையும் பார்க்க முடிகிறது.
18ம் நூற்றாண்டில் உருவான இந்த Coffee House கலாச்சாரம் பல அரசியல் கலாசாரத்தை சுமந்துள்ளது. ஊரில் இருக்கும் பாரம்பரியமான தேநீர் கடைக்கு சென்று தேநீர் பருகிக்கொண்டே அங்கு இருப்பவர்களின் உரையாடல்களை சற்று கவனித்தாலே போதும், அந்த நிலப்பரப்பின் வாழ்வியலையும் மக்களின் எண்ணங்களை அறிந்துக்கொள்ளலாம்.
குறைந்த செலவில் அரைமணி நேரம் பொழுதை கழிக்க வேண்டுமென்றால் தேநீர் கடைகளே அதற்கு முதல் விருப்பமாக இருக்க முடியும்.
தேநீர் கடைகள் பொழுதை போக்கும் இடம் மட்டுமல்ல அது கண்ணாடி குவளைகளின் மாநாடு.
Comments
Post a Comment
Share your thoughts!