நவிரம் - சிறுகதை.
சீரான இடைவெளியில் மண்ணில் பாதி புதைந்திருந்த ரப்பர் டயர்களின் மீது மழலைகள் தாவியாடிக் கொண்டிருந்தார்கள். தொங்கும் கயிறு பாலம், மரப்பாலம், லாரி டயரினால் செய்யப்பட்ட குகை என பல வித்தியாசமான விளையாட்டுகளும்; ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கூண்டு, சீ-சா போன்ற வழக்கமான விளையாட்டுகளும் இருந்தது.
பல வண்ணங்களில் தீட்டப்பட்டு இருந்த அனைத்து விளையாட்டுகளிலும், குழந்தைகள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்கள். அவர்களை தங்களின் கண் பார்வையிலேயே இருக்கும்படி பெற்றோர்கள் அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டார்கள்.
மழைநீர் சேகரிப்பு, மக்கும்-மக்காத குப்பை, டெங்கு ஒழிப்பு, நடைப் பயிற்சியின் பயன்கள், மனிதன் நிலவில் கால் பதித்த காட்சி, சூரியக் குடும்பம், கிரகணங்கள், மயில் வடிவில் இருக்கும் மாவட்டத்தின் வரைபடம் என பலப் படங்கள் பூங்காவின் சுற்று சுவர் முழுவதும் ஓவியமாக வரையப்பட்டு இருந்தது.
ஆங்காங்கே போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்ச் அனைத்திலும் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளுடன் வந்தவர்களாகவும் சிலர் வேடிக்கை பார்த்து பொழுதை போக்க வந்தவர்களாகவும் இருந்தார்கள்.
ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் சுவரில் கருப்பு வெள்ளையில் இருந்த அக்கிழவனின் படத்தை ஒரு கணம் நின்று கவனித்தான். பெரிய நெற்றியும் சுருக்கங்கள் நிறைந்த முகமுமாய், காய்ந்த நரைத்த தலைமயிர் கழுத்து வரைக்கும் இருந்தது. முக்கியமாக அந்தக் கிழவன் தன் நாக்கை முழுவதுமாக வெளியே நீட்டி இருந்தான். அதன் காரணமாக அக்கிழவனின் கண்கள் விரிந்து இருந்தது. அக்கிழவன் தன்னை பார்த்து தான் நக்கல் செய்வதாக கருதிய அச்சிறுவன், தன்னுடைய நாக்கையும் வெளியே நீட்டி "வெவ்வே" என சொல்லிவிட்டு ஓடினான். இடது பக்கம் அந்தக் கிழவனின் பெயரும் அவன் வாழ்ந்த காலமும், வலது கீழ் ஓரத்தில் அவன் கண்டு பிடித்த புகழ்பெற்ற சமன்பாடும் வெள்ளை வண்ணத்தில் எழுதப்பட்டு இருந்தது.
பூங்காவிற்கு நடுவில் செயல்படாமல் இருந்த சிறிய நீர் ஊற்றுக்கு பக்கத்தில் இருந்த மரத்தில் 'நூலகம்' என்ற பெயர் பலகை காற்றில் கிளையோடு சேர்ந்து ஆடிக்கொண்டு இருந்தது. அதற்கு கீழே ஒரு மர மேசையில் நான்கு பிளாஸ்டிக் டிரேக்களில் சிறார் கதை புத்தகங்களும் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பக்கத்திலேயே இருவர் தாராளமாக அமரக் கூடிய மரப்பலகையில் மூன்று ஆண்கள் நெருக்கமாக அமர்ந்து இருந்தார்கள்.
அங்கு இருப்பதிலேயே ஊஞ்சலுக்கு தான் அதிக மவுசு இருந்தது. தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் பிள்ளைகளை ஊஞ்சலில் அமரவைத்து ஆட்ட அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள் வரை மட்டுமே கிடைத்தது. சிலர் பிள்ளைகளை இறக்குவதற்கு முன் ஊஞ்சலில் அவர்களும் உட்கார்ந்து பிள்ளைகளை மடியில் அமர வைத்து 'செல்பி' படமும் எடுத்து மகிழ்ந்தார்கள். சுற்றி அமைக்கப்பட்டு இருந்த வெள்ளை விளக்குகளின் வெளிச்சம் போதுமானதாக இருந்தாலும்
பிரமாதமான படங்கள் எடுக்கும் அளவிற்கு பிரகாசம் போதவில்லை. 'டிபி' ஆக வைக்க முடியாவிட்டாலும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைக்க அந்த படங்கள் போதுமானதாக இருந்தது.
"அம்மு போலாமா?".
சரி என்பது போல் தலையை அசைத்து "ம்" எனச் சொல்லி அரை மனதாக ஒப்புக் கொண்டாள்.
அம்முவின் கையைப் பிடித்து அங்கிருந்து நகர்ந்துக் கொண்டே "நாளைக்கு திரும்பவும் வந்து ஆடலாம் என்ன..." என உறுதியத்தாள்.
"ம்" என்றாள்.
பூங்கா முழுவதும் நிரம்பி இருந்த மக்களின் கூட்டமும் பிள்ளைகளின் விளையாட்டு சப்தமும் ஊர் திருவிழாவை நினைவு படுத்தியது. அதன் காரணமாக அவளின் கொலுசு சப்தம் அவ்வளவாக கேட்கவில்லை.
டிரேக்களில் இருந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நான்காவதாக எடுத்த புத்தகத்தின் முன் பக்க அட்டையில் இருந்த ஆளை அவனுடைய சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பார்த்ததாக நினைவுக்கு வர புத்தகத்தை தீவிரமாக புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.
நீர் ஊற்றுக்கு பக்கத்தில் வந்தவள் "என்னங்க போகலாம்" என அழைத்து அவனின் கவனத்தை இழுத்தாள்.
நிமிர்ந்து பார்த்த அவன், இணையத்தை துண்டித்துவிட்டு கைபேசியை சட்டைப் பையில் வைத்துக் கொண்டே அவர்களை நோக்கிச் சென்றான்.
"என்னம்மா ஜாலியா விளையாடுனியா?".
"ம்" என தலையசைத்தாள்.
"ஊஞ்சல் மட்டும் விளையாட முடியலைங்க செம கூட்டம், அதான் உம்முனு இருக்கா".
"இருந்து விளையாடிட்டு வர வேண்டியதுதானே".
"எவ்வளவு கூட்டம் தெரியுமா? லேட் ஆகுங்க, கடைக்கு வேற போகணும்ல".
"ஓ".
நிலைமையை புரிந்துக் கொண்ட அவன் "சரி நாளைக்கு இன்னும் சீக்கிரம் வந்து மொதல்ல ஊஞ்சல் விளையாட்டிட்டு அப்பறம் மத்தது எல்லா விளையாடலாம் என்ன...".
மறுபடியும் அதேபோல் "ம்" என்றாள்.
அவனின் வார்த்தைகள் அவளது முகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
"அம்மா தண்ணி!" எனக் கேட்டவள் தன் இடதுகையின் நான்கு விரல்களையும் உள்ளங்கையோடு மடித்து கட்டைவிரலை உதட்டருகில் வைத்திருந்தாள்.
அவனிடம் கொடுத்து வைத்திருந்த தன் பையை வாங்கி, வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மஞ்சள் புட்டியின் மூடியை கழற்றிக் கொடுத்தாள்.
புட்டியில் உதடுகளைப் பதித்து மூன்று முடக்கு குடித்தாள். போதும் எனச் சொல்லி புட்டியை நீட்டினாள். கைக்குட்டையை கொண்டு அவளின் உதடுகளில் இருந்து வழிந்த தண்ணீரை அழுத்தி துடைத்து விட்டு புட்டிலை வாங்கி "உங்களுக்கு" என அவன் முன் நீட்டினாள்.
"இல்ல வேண்டாம்".
மீதி இருந்த தண்ணீரில் பாதியை குடித்தாள். ஒரு புத்துணர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைத்தது மாதிரி இருந்தது.
புட்டியை மூடி பையில் வைத்து அவளது வலது தோளில் மாட்டிக் கொண்டு "போலாம்" என்றாள்.
அவன் முன்னே நடக்க, அம்முவின் வலது கையை பற்றிக்கொண்டு அவளும் நடக்க ஆரம்பித்தாள். சம்பங்கி கொடியினால் உருவாக்கப்பட்டிருந்த வளைவு பாதை வழியாக வாயிலை நெருங்கினார்கள்.
நுழைவு வாயிலை ஒட்டி இருந்த காவலாளி அறையிலிருந்து வந்த 'மைக்கை'ப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் பதற்றத்துடன் ரைம்ஸ் ஒன்றை சிறுவன் ஒருவன் பாடிக் கொண்டிருந்தான். அந்த அறையின் ஜன்னலில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் இருந்து 10 அடி சுற்றளவுக்கு மட்டுமே கேட்கும்படி ஒலி அமைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த அவனது பெற்றோர்கள் அவன் பாடுவதை பூரித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் படிப்பின் மீதான ஆர்வத்தையும் தன்னம்பிக்கையும் வளர்க்க நகராட்சி சார்பில் செய்த ஏற்பாடாகும். தங்கள் பிள்ளைகளையும் அவர்கள் பள்ளியில் கற்ற பாடல்களையும் கதைகளையும் 'மைக்கில்' சொல்ல வைக்க வேண்டுமென பல பெற்றோர்கள் அந்த அறையைச் சுற்றி ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
பூங்காவின் இரும்பு வாயிற் கதவை தாங்கிக்கொண்டு இருந்த சிமெண்ட் தூண்களில் வலது தூணில் 'நவிரம்' என்பதின் பெயர் காரணமும், இடது தூணில் பூங்கா திறக்கப்படும் நேர அட்டவணையும் எழுதப்பட்டிருந்தது.
அவர்கள் வாயிற் கதவை கடந்து இருந்தார்கள். சிராய்ப்பு பையிலிருந்த சாவியை எடுத்து வண்டி விட்ட இடம் நோக்கி நடந்தான்.
வார விடுமுறை என்பதால் பூங்காவிற்கு இரண்டு பக்கமும் இருசக்கர வாகனங்கள் நெருக்கமாக நிறுத்தப்பட்டிருந்தது. முதலில் வந்தவர்கள் வரிசையாகவும் அதற்குப் பிறகு வந்தவர்கள் தாறுமாறாகவும் தங்கள் வண்டிகளை நிறுத்தி இருந்தார்கள். அந்த வண்டிகளுக்கு இடையில் தள்ளுவண்டி கடைகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. யார் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழுக்கிறார்கள் என்பதில் பானி பூரிக்கும் சாக்கோபாருக்கும், யார் அதிகப்படியான புகையையும் ஆவியையும் வெளியிடுகிறார்கள் என்பதில் அவித்த மல்லாட்டை, காரப்பொரி மற்றும் ஸ்வீட் கான்களுக்கும் இடையே பலத்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பானி பூரியும் ஸ்வீட் கானும் அவரவர் பிரிவில் முன்னிலை வகித்திருந்தார்கள்.
கிட்ட நெருங்கும் போது தன்னுடைய வண்டிக்கு குறுக்கே இன்னொரு வண்டி இருப்பதை பார்த்த அவன் கையில் இருந்த சாவியை மீண்டும் சோபியில் சொறுகிவிட்டு அந்த வண்டியை நகர்த்த தயாரானான்.
"நான் ஏதாவது வண்டியை பிடிக்கட்டுமா".
"இல்ல வேண்டாம் நானே எடுத்துக்கிறேன்".
"கொஞ்சம் கூட அறிவே இல்லை இவங்களுக்கு" என திட்டிக்கொண்டே அந்த வண்டியின் 'கிளட்சை' பிடித்து நகர்த்த ஆரம்பித்தான்.
"ஐஸ்கிரீம்... சாக்கோபார் ஐஸ்க்ரீம்...வெண்ணிலா ஐஸ்கிரீம்..." என மணி அடித்துக் கூவிக்கொண்டு இருந்தவர் அம்முவின் பார்வையை இழுத்து இருந்தார்.
"எக்ஸ்க்யூஸ் மீ கொஞ்சம் நகருங்க".
அம்முவை சேர்த்து இழுத்து நகர்ந்த பிறகு யார் எனப் பார்த்தாள். அந்தப் பெண் இவர்கள் மறைத்து நின்றிருந்த ஸ்கூட்டியின் சீட் அருகே சாவியை போடச் சென்றாள்.
பார்த்த அடுத்த நொடியே அவளின் முகம் பிடிபட்டது, பெயர்தான் ஒரு நொடி கழித்தே நாவிற்கு வந்தது.
"ஏய் காயத்ரி...!".
சீட்டை தூக்கிப் பிடித்திருந்தவள் யாரென்று திரும்பிப் பார்த்தாள்.
அவளுக்கு முகமும் பெயரும் ஒன்றாக பிடிப்பட்டது, கூடவே வியப்பும் மகிழ்ச்சியும் தொற்றிக் கொண்டது.
"ஏய் சந்திரா! நீயா...! எப்படி இருக்க? செம சப்ரைஸ்!" டக்குனு சீட்டை மூடிவிட்டு சந்திராவிற்கு பக்கத்தில் வந்தாள்.
"நல்லா இருக்கேன்! நீ எப்படி இருக்க?".
"நானும் நல்லா இருக்கேன். இவ்வளவு நேரமும் பார்க்லியா இருந்த?".
"ஆமா, நீ?".
"நானும்தான், பார்க்கவே இல்ல பாரேன்".
வெற்றிகரமாக அந்த வண்டியை தள்ளி நிறுத்திவிட்டு தன் வண்டியை எடுக்க வழி செய்திருந்தான். அடுத்ததாக அவனது வண்டியோடு ஒட்டிக்கொண்டிருந்த வண்டிகளை நகர்த்த முற்பட்டான்.
சந்திரா பிடித்துக்கொண்டிருந்த குழந்தையின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினாள் காயத்ரி.
"உன் குழந்தையா?".
"ஆமா".
காயத்ரி இன்னும் பரவசமடைந்தாள்.
"ஆண்டிக்கு வணக்கம் சொல்லு" என தன் பிடியை தளர்த்தினாள் சந்திரா.
பிடியில் இருந்து விடுபட்டு இரு கரங்களையும் ஒன்று சேர்க்க வந்தாள்.
சட்டென பார்வையை சந்திரா பக்கம் திருப்பி, "என்னது நான் ஆண்டியா?" என அதிர்ச்சியுடன்
கேட்டாள்.
"ஆமா! அவளுக்கு நீ ஆண்டி தானே, பின்ன என்ன தங்கச்சியா?".
கோபித்துக் கொண்டு "நீ கூட தான் ஆண்டி" என செல்லமாக சொன்னாள்.
"எது நானா? உன்னவிட ஒல்லியா இருக்கேன், என்னப்போய் ஆண்டினு சொல்றீயே! இது நிய...".
"குழந்த பெத்துட்டல்ல, அப்புறம் நீயும் ஆண்டி தான்".
"இருவரும் புன்னகையை பரிமாறி பழி தீர்த்துக் கொண்டார்கள்".
குனிந்து தன் இரு கைகளையும் நீட்டினாள். தயக்கத்தை வெளிப்படுத்திய அம்மு மறுப்பு தெரிவிக்காததால் தூக்கி தன்னுடைய இடுப்பில் அமர வைத்துக்கொண்டு நேர்காணலை தொடங்கினாள்.
"வாட் இஸ் யுவர் நேம்?".
மௌனம் காத்தாள்.
"அம்மு, கேட்கிறாங்கல சொல்லுமா".
மென்மையான குரலில் 'பிரித்திகா' என்றால்.
"ஸ்கூலுக்கு போறியா?".
தலையை அசைத்தாள்.
"என்ன ஸ்டான்டர்டு படிக்கிற?"
"எல்.கே.ஜி.".
ஒருவழியாக வண்டியை வெளியே எடுத்து இருந்த அவன், யாரோ தெரிந்தவர்களோடு சந்திரா பேசிக்கொண்டு இருக்கிறாள் என்பதைக் கவனித்தான்.
"என்ன ஸ்கூல் படிக்கிற?".
தன் கணவன் வண்டியை வெளியே எடுத்து இருந்ததைப் பார்த்த சந்திரா, காயத்ரியை பார்த்து "என் அஸ்பண்ட்" என்று தாழ்ந்த குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னாள்.
அவன் இவர்களின் எதிர்ப்பக்கமாக திரும்பி நின்றுகொண்டு இருந்தான்.
பிரித்திகாவை சந்திராவிடம் ஒப்படைக்க நெருங்கி நீட்டினாள். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தனக்கு பிடித்தமான பழக்கமான இடுப்பில் தாவி சௌகரியமாக அமர்ந்து கொண்டாள்.
"என்னங்க..." என அழைத்து அவனின் கவனத்தை இழுத்தாள்.
ஒரு விருந்தாளியை எதிர்கொள்ள தயாராவது போல் தன்னைப் பாவித்துக்கொண்டாள் காயத்ரி.
"இவ என்னோட ஸ்கூல் பிரண்ட் காயத்ரி, லெவத் டுவல்த் ஒன்னா படிச்சோம்".
"ஹலோ" என சொல்லி காயத்திரியின் அறிமுகத்தை பெற்றுக் கொண்டான்.
"இவர் என் அஸ்பண்ட், ரகுவரன்".
அவளும் "ஹாய்" என்றாள்.
வண்டியை எடுக்க செய்த முயற்சியின் காரணமாக அவன் மனம் இயல்பு நிலையில் இல்லாமல் இருந்தது. மேலும்
தோழிகள் அவர்களுக்குள் எதாவது பேசிக் கொள்ளட்டும் என உரையாடலை தொடராமல் அமைதியாக இருந்தான்.
அவனின் அமைதி, "எதிர்பாராத தன்னுடைய வருகைதான் அவர்கள் கிளம்புவதற்கு தடையாக இருக்கிறது" என நினைத்த காயத்ரி, சந்திராவிடம் "சரி அப்பறம் பாக்கலாம்" எனச் சொல்லி சந்திப்பை முடிக்க முயன்றாள்.
"கண்டிப்பா பாக்கலாம், ஒரு நாள் வீட்டுக்கு வா".
"ஆ, வரேன் வரேன்".
"ஆம! நீ நம்ம ஸ்கூல் குரூப்ல இருக்க?".
"ஆங்! இருக்கேன்".
"இருக்கியா! அப்புறம் ஏன் மெசேஜ் பண்றது இல்ல".
"பண்றதில்ல...".
"சரி சரி, நான் அப்பறமா நம்பர் எடுத்து கால் பண்றேன்".
"சரி பண்ணு".
"பார்க்கலாம்".
"பாய்".
"என்னங்க போலாம்".
அவனும் "பார்க்கலாம்ங்க" என சொல்லி விடை பெற்று வண்டியில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தான்.
வலதுபக்க தோளிலிருந்த பையின் பிடியை கழுத்து வரைக்கும் தள்ளிவிட்டு இடுப்பில் இருந்த அவளை தன் இடதுபக்க தோளில் மார்போடு சாய்த்து பிடித்துக்கொண்டு வண்டியின் பக்கத்தில் சென்றவள் அவனது வலது தோளில் கையை வைத்து சக்கரத்திற்கு அருகில் இருந்த ஸ்டாண்டில் தன் வலது காலை வைத்து ஒரு தம் பிடித்து ஏறி உட்கார்ந்தாள்.
தோளில் இருந்தவளை இரண்டு தொடைக்கும் நடுவில் அமர்த்தி தன்னுடைய முந்தானையை இடது பக்க இடுப்பு வழியாக பிரித்திகாவின் முதுகுக்கும் அவளுடைய வயிற்றுக்கும் நடுவில் சொறுகிவிட்டு, இடது கையை பிரித்திகாவின் வயிற்றில் பதித்து தன் வயிற்றோடு அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
"ம்...போலாங்க".
காயத்ரியை பார்த்து சிரித்த முகத்துடன் கண்கள் விரிய, குரல் எழுப்பாமல் உதட்டை அசைத்தாள்.
அதை புரிந்துகொண்ட அவளும் அதே போல் குரல் எழுப்பாமல் சிரித்த முகத்துடன் "பாய்" என கையை அசைத்தாள்.
வண்டி மூன்றடி நகர்ந்து இருக்கும்.
"பாய்" என தனது இடது கரத்தால் முன்பை விட சற்று உயர்ந்த குரலில் காயத்ரி ஆண்டியை பார்த்து கையசைத்தாள் பிரித்திகா.
இதை சற்றும் எதிர்பார்க்காத காயத்ரி, "பாய்! பாய்!" என வேகமாகவும் உற்சாகமாகவும் கையை அசைத்தாள். தனது மகள்
தானாகவே "பாய்" சொன்னதை நினைத்து சந்திரா பெருமை பட்டாள்.
அவள் மீண்டும் சீட்டை தூக்கி, ஏவுகணை வடிவில் இருந்த பச்சை நிற புட்டியை எடுத்துக்கொண்டு பூங்காவிற்கு சென்றாள்.
பூங்காவில் இருந்து சில அடி தூரத்தில் வேலூர் மற்றும் காஞ்சி சாலைகள் சந்திக்கும் சந்திப்பு இருக்கிறது.
மற்ற இரண்டு சாலைகளின் முடிவிலும் இவர்கள் போய்க்கொண்டிருக்கும் சாலையில் இருப்பது போல் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக சந்திப்பை கடந்து செல்லும்.
ரகு அந்த சந்திப்பை கடக்க வேண்டுமென்றால் தனக்குப் பின்னால் வருபவர்கள் எந்த பக்கமாக திரும்ப இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்; இடது பக்கமாக இருக்கும் காஞ்சி சாலையிலிருந்து, சந்திப்பை கடந்து செல்லும் வாகனங்களை பார்க்கவேண்டும்; முன்னாடி இருக்கும் வேலூர் சாலையில் இருந்து காஞ்சி சாலைக்கு 'யு'-வளைவு எடுப்பவர்களையும் பார்க்க வேண்டும்.
இவ்வளவையும் கண்ணிமைக்கும் நேரத்தில் கவனிக்க வேண்டும், இல்லையென்றால் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம்.
சந்திப்பை வெற்றிகரமாக கடந்து வேலூர் சாலையை பிடித்திருந்தான்.
சந்திப்பை கடக்கும் போது இறுக்கமான மனநிலையில் இருந்த அவன் வேலூர் சாலையின் தொடக்கத்தில் இருக்கும் 'அண்ணா நுழைவு வாயிலை' கடந்த அடுத்த நொடியே இறுக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்திருந்தான். அதன்பிறகு வேற எந்த சந்திப்பும் பெரிய திருப்பமும் கிடையாது. நேராக ஒரே சாலை. அப்புறம் ஒரு இடபக்க திருப்பம், பின்னர் வீடுதான்.
வரிக்குதிரை வண்ண சிமெண்ட் தடுப்பு எழுப்பப்பட்டு இருந்தது. ஆங்காங்கே 'யு'-வளைவு எடுப்பதற்காக 'கார்' செல்லும் அளவிற்கு பல இடைவெளிகளும் இருந்தது.
மின் நகர், தென்றல் நகர், வேங்கிக்கால் பகுதி மக்களின் தேவைகளை இந்த சாலையில் இருக்கும் கடைகள் தான் பூர்த்தி செய்து வருகின்றன.
அண்ணா நுழைவு வாயிலை கடந்து 400 அடி பயணித்து இருப்பார்கள். சாலையில் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து கொஞ்சம் அதிகமாக இருந்தது. எல்லா கடைகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் டீக்கடையிலையும் உணவகங்களிலுமே அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது.
ரகுவின் தோளில் இருந்த கையை எடுத்து பின்னால் வருபவர்களுக்கு திரும்புவதற்காக சமிக்ஞை செய்தாள்.
வழக்கமாக கடைக்கு அருகில் திரும்பும் அந்த 'யு'-வளைவைத் தாண்டி ரகு போய்க் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த சந்திரா, அவன் தோளில் இரண்டு முறை வேகமாக தட்டி "ஏய்! கடைக்கு போகணும் திரும்பு, எங்க போற?" என கோபமாக கேட்டாள்.
ஏற்கனவே போட்டிருந்த திட்டம் நினைவுக்கு வர "ஏய்! முன்னாடியே சொல்ல வேண்டியது தானே" என கேட்டேன்.
"அதான் பார்க்லையே ஞாபகப்படுத்தினேனே".
"அது இல்ல, கடை கிட்ட வர்ரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஞாபகப் படுத்த வேண்டியதானே".
"இதக் கூட ஞாபகம் வைச்சிக்கலானா என்ன?".
அதற்குள் அடுத்த 'யு'-வளைவு வந்திருந்தது.
இண்டிகேட்டரை போட்டு பின்னாடி வண்டிகள் ஏதாவது வருகிறதா எனக் கண்ணாடியில் பார்த்துவிட்டு வேகத்தை குறைத்து திரும்பினான். இந்த முறை அவள் சமிக்ஞை செய்யவில்லை. திரும்பும் போது அவனையும் குழந்தையும் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
அதன் பின் கடையை நெருங்கும் வரை அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கடை நான்கு தளங்கள் கொண்ட மிகப்பெரிய கட்டிடத்தில் இருந்தது. கடைக்கும் சாலைக்கும் இருந்த இடைவெளியில் சிமெண்ட் கற்களால் சற்று சாய்வாக தளம் அமைக்கப்பட்டு இருந்தது. கடையின் முதல் தளத்தின் வாயிற் பகுதி முழுவதும் தடிமனான கண்ணாடி சுவர் பொருத்தப்பட்டிருந்தது. அதனால் கடைக்குள் இருப்பதை வெளியே இருந்தே பார்க்க முடிந்தது.
கடையின் வலது பக்கத்தில் இரண்டு இருசக்கர வாகனமும் இடது பக்கத்தில் ஒரு காரும் இருந்தது. கடைக்கு வந்தடைந்த ரகு நேராக வலது பக்கம் சென்று தாராளமாக இடம் விட்டு வண்டியை நிறுத்தினான்.
பிரித்திகாவை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இடது காலை முதலில் கீழே வைத்து முழுவதுமாக இறங்கிய பின் அவளை தரையில் இறக்கி விட்டாள். தூக்கிக்கொண்டு இருந்த பிரித்திக்காவின் ஆடையை இழுத்து சரி செய்து விட்டு அவளுடைய புடவையையும் சரி செய்துக்கொண்டாள். தோளில் சரிந்திருந்த பையின் ஒரு பிடியை கழுத்துக்கு பக்கத்தில் தள்ளிவிட்டப்பிறகு பிரித்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வண்டியை பூட்டி சாவியை சோப்பியில் சொருகிக் கொண்டு வேகமாக சந்திராவை நோக்கி சென்றான். பிரித்திகாவின் பின்பக்கமாக அக்குளுக்கு அடியில் இரண்டு கைகளையும் விட்டு தூக்கி தன் இடது விலா எலும்போடு அனைத்து தன் இடது கையை அவளது பின் தொடையில் அழுத்தி தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
"இப்ப நம்ம எங்க போறோம் ஷாப்பிங் போறோம்" என அவளுக்கு விளையாட்டு காட்டினான்.
சட்டென சந்திரா திரும்பிப் பார்த்தாள், இவன் புன்சிரிப்பு செய்தான். அவள் எந்த பாவனையையும் காட்டாமல் திரும்பிக்கொண்டாள்.
வெள்ளி நிறத்தில் மின்னிய கைப்பிடியை பிடித்து அந்த வழவழப்பான கருப்பு நிற கற்கள் பதித்த படிகளை ஏறி கடையின் வாயிலை நோக்கி சென்றாள். கடைக்குள் இருந்து வந்த பிரகாசமான வெள்ளை விளக்கின் ஒளிகள் அந்த கருப்புநிற கற்களின் மேல் படர்ந்திருந்தது.
அவன் கைப்பிடியை பிடிக்காமலேயே அவளைப் பின்தொடர்ந்தான். படியில் ஏறும் போதே உள்ளே இருந்து கவனித்த சாம்பல் நிற உடையணிந்த காவலாளி, இவர்கள் வாயிற் கதவருகில் வந்ததும் கண்ணாடிக் கதவை இழுத்து தன்னுடனேயே பிடித்துக் கொண்டார்.
பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் மழை பெய்த பிறகு அடிக்கும் குளிர் காற்றை போல் கடைக்குள் இருந்து சில்லென காற்று அடித்தது.
அந்தக் காவலாளிக்கு வயது 50 இருக்கும். காவல் துறை ஊழியர்களை போல் முடி வெட்டி இருந்தார். அவரது மீசையும் தொப்பையும் கொஞ்சம் பெரிதாக இருந்தது. கருப்பு நிறத்தில் பெல்ட்டும் சூவும் அணிந்து இருந்தார்.
வாசலைக் கடந்து இருந்த சமயத்தில் உள்ளேயும் வெளியேயும் நிலவிய வெப்பத்தின் வித்தியாசத்தை ரகுவால் நன்றாக உணர முடிந்தது.
காவலாளி கதவை மூடியவுடன் வெப்ப வித்தியாசமும் சாலையில் வேகமாக போய்க் கொண்டிருந்த வாகனங்களின் சப்தமும் முழுவதுமாக குறைந்தது. தூரத்தில் 'பில்' போடும் இடத்தில் இருந்து வந்த "கிங்" ஒலியும் தலைக்குமேல் ஒலிபெருக்கியில் இருந்து வந்த புதுப்பட பாட்டு சப்தத்தையும் தவிர வேற எந்த பெரிய சப்தமும் கடைக்குள் உலாவவில்லை. அதன்காரணமாக கடையில் நிலவிய அமைதி ஒரு தியான அரங்கத்தை நினைவுபடுத்தியது.
கதவில் இருந்து 5 அடி தூரத்தில், உடம்போடு ஒட்டிய கருப்பு நிற சிராய்பில் சாம்பல் நிற முழுக்கை சட்டை சொருகிய சீருடையில் இவர்களை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருந்தாள் அந்தப் பெண் ஊழியர். அவளுக்கு வயது 25 இருக்கும். எண்ணெய் போடாமலும் வகுடு எடுக்காமலும் அழுத்தி வாரிக் கொண்டை போட்டு இருந்தாள். காவலாளியை போல் கருப்பு நிற பெல்ட்டும் சூவும் அணிந்து இருந்தாள்.
"வணக்கம்" சொல்லி வரவேற்று எடுக்கும் துணிகளைப் போட்டு வைப்பதற்காக கொசு வலை போல் இருந்த துணியால் தைக்கப்பட்ட ஒரு ஜோல்னா பையை மடித்த நிலையில் சந்திராவிடம் நீட்டினாள். ஒரு துணி எடுப்பதுதான் சந்திராவின் திட்டமாக இருந்ததால் "வேண்டாம்" என சொல்லிவிட்டு நகர்ந்தாள். புதிதாக ஏதாவது வரவுகள் வந்திருந்தால் அவளது திட்டத்தில் மாற்றம் ஏதும் ஏற்படலாம்.
பின்னாடி வந்த ரகுவிற்கும் அதேபோல் "வணக்கம்" சொல்லி வரவேற்று பையை நீட்டினாள். அவனும் வேண்டாம் என சமிக்ஞை செய்தான்.
தரைத்தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவும், முதல் தளத்தில் ஆண்களுக்கான பிரிவும் இருந்தது.
"அம்மா இங்க பார்க்கட்டும், நாம மேல போய் பார்க்கலாம்..." என சாடை மாறியாக அவளுக்கு சொல்வதுபோல் பிரித்திகாவிடம் கொஞ்சலான தொனியில் சொன்னான்.
"எதே! இது என்ன புது ப்ளான்?"
"இல்ல ஏதாவது கலக்சன் வந்து இருக்கான்னு பார்த்துட்டு வந்திடுறேன். நீ எடுத்து முடிக்கிறதுக்குள்ள வந்திடுறோம்".
"அதெல்லாம் முடியாது, எனக்கு செலக்ட் பண்ணி கொடுத்துட்டு அப்புறம் வேணும்னா மேலே போய் பாருங்க!"என கண்டிப்பாக சொன்னாள்.
உத்தரவை ஏற்ற ரகு, "சரி போங்க மேடம்" என பணிவோடு சொன்னான்.
தன் கட்டளைக்கு கீழ்ப்படிந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் பெண்கள் பகுதிக்கு நுழைந்தாள்.
வரிசைகளுக்கு நடுவே சீருடையில் நின்றிருந்த அந்த ஆண் ஊழியர் "சொல்லுங்க மேடம்" என பவ்வியமாக சந்திராவை அணுகி தேவைகளை கேட்டறிந்து அவள் விரும்பிய துணிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
திடீரென்று சாலையின் இரைச்சல் கடைக்குள் புகுந்தது. சந்தன நிற லெக்கீன்சும் ரோஸ் நிற குர்தியும் அணிந்திருந்த பெண் ஒருவர் கையில் கடையின் பையுடன் வெளியே போய்க் கொண்டிருந்தார். கதவு மூடியவுடன் மீண்டும் அமைதி திரும்பியது.
அவன் அங்கேயே நின்றுக்கொண்டு கடையையும் துணிகளையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு, ரோஸ் என துணிகள் அனைத்தும் பளிச்சென்று இருப்பதை கவனித்தான். ஆண்கள் பிரிவில் இந்த அளவுக்கு வண்ணங்கள் இருந்ததில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான். தன் மனைவியின் புடவையையும் கவனித்தவன், ஆரஞ்சும் ரோசும் கலந்த நிறத்தில் இருப்பதை பார்த்தான். அவன் அணிந்திருந்த உடையின் நிறத்தையும் குனிந்து பார்த்தான். ஜீன்ஸ் கருநீல நிறத்திலும் சட்டை தனியா பொடி நிறத்திலும் இருந்தது. அப்படியே கையிலிருக்கும் மகளின் உடையை பார்த்தான், சிவப்பும் வெள்ளையும் கலந்த உடையில் இருந்தாள்.
பிரித்திகா வாசல் பக்கமாக தலையை திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் எதை பார்க்கிறாள் என அவனும் வாசலை நோக்கினான். இரண்டு இளைஞர்கள் கடைக்குள் நுழைந்தார்கள். மீண்டும் இரைச்சல் கடைக்குள் புகுந்து மூன்று நொடியில் அடங்கியது. அதில் ஓர் இளைஞன் அரைக்கால் சிராய்ப்பு அணிந்திருந்தான். வந்தவர்கள் நேராக முதல் தளத்தின் படியை நோக்கி சென்றார்கள். ரகு தன் இயலாமையை நினைத்துவிட்டு மீண்டும் துணிகளை வேடிக்கை பார்க்க தொடங்கினான். வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த பெண்களின் உடைகள் அனைத்தும் மிகவும் மென்மையாக இருப்பது போல் அவனுக்கு தோன்றியது. அருகில் சென்று தொட்டுப் பார்த்தால் தான் என்ன? என முடிவு செய்து ஒரு அடி முன்னே வைத்தான்.
"அப்பா! கீழ இறக்கி விடுங்க".
அவளும் தன்னைப் போல் எதையாவது அருகில் சென்று வேடிக்கை பார்ப்பாள் அல்லது ஓடியாடி விளையாடுவாள் என நினைத்து குனிந்து இறக்கி விட்டான்.
தரையில் கால் பதித்த அடுத்த நொடியே தன் அப்பாவின் பிடியில் இருந்து விடுபட்டு வாசலை நோக்கி ஓட்டம் பிடித்தாள். புதிய 50 பைசா நாணயங்களை தரையில் கொட்டியது போல் அவளின் கொலுசொலி அந்த இடத்தை ஆக்கிரமித்தது. திடீரென்று எழுந்த கொலுசொலி தன்னை நோக்கி வேகமாக வருவதை உணர்ந்த அந்த பெண் ஊழியர் யாரென்று பார்க்கத் திரும்பினாள். அதற்குள் அந்த கால்கள் அவளை கடந்து இருந்தது.
சற்றும் எதிர்பாராத இந்தச் செயலைக் கண்டு வியந்தான் ரகு. அவன் நிமிர்வதற்குள் பிரித்திகா வாசலை அடைந்திருந்தாள். காவலாளியை நெருங்கும் போது கொலுசொலி குறைந்து இருந்தது. வாசல் கதவு வரைக்கும் வந்து விட்டதால் எக்காரணத்தைக் கொண்டும் அவள் வெளியே சென்று விடாதபடி பார்த்துக் கொள்ளும் பொறுப்பை காவலாளி தானே ஏற்றுக்கொண்டார்.
காவலாளி முன் பொறுமையாக நின்றவள் விரல்கள் அனைத்தையும் உள்ளங்கையோடு மூடி இரு கரங்களையும் இடுப்போடும் தொடையோடும் ஒட்டி நேராக நின்றாள். தனக்கு முன் எதற்காக இந்தச் சிறுமி இப்படி நிற்கிறாள் என விடை தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். உடம்பை கொஞ்சம் முன்னே சாய்த்து 'தேங்யூ' எனச் சொன்னாள். அவள் செயலின் அர்த்தம் புரியாமல் மூவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சல் சல் சல் சல் சல் என ஐந்து கொலுசொலியில் பெண் ஊழியர் முன் வந்து நின்றாள்.
காரணம் புரியாவிட்டாலும் குழந்தையின் விளையாட்டு தனத்தில் இதுவும் ஒன்றாக இருக்கும் என நினைத்து அவளைப் பார்த்து புன்னகைத்தாள் அந்த பெண் ஊழியர்.
தன் இரு கரங்களையும் சேர்த்து நெஞ்சுக்கு நேராக வைத்து "வணக்கம்" எனச் சொன்னாள். உள்ளங்கை மட்டுமே ஒட்டிக்கொண்டிருந்தது, விரல்கள் அனைத்தும் பின்னிக் கொண்டிருந்தது. நோக்கம் வெற்றி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் தன் அப்பாவை நோக்கி மீண்டும் கொலுசொலிகளை சிதறவிட்டுக் கொண்டே ஓடினாள்.
ரகுவின் காலுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றவள் இரு கரங்களையும் தலைக்குமேல் உயர்த்தி தன்னை தூக்கிக் கொள்ளுமாறு வேண்டினாள்.
ஆண் ஊழியரின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்த சந்திரா, ரகு இங்கேதான் இருக்கின்றனா அல்லது முதல் தளத்திற்கு சென்று விட்டானா என நோட்டம் விட்டாள்.
கடைசியாக எங்கு பேசிக் கொண்டார்களோ அங்கேதான் நின்றுக்கொண்டு இருக்கிறான் என்பதை பார்த்தாள். ஆனால் அவன் கையில் பிரித்திகா இல்லை. அவன் கீழே குனிந்து இருப்பதுபோல் அவளுக்கு தெரிந்தது. துணிகளின் வரிசை மறைத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் நகர்ந்து எட்டிப் பார்த்தாள்.
ரகுவின் காலுக்கு அருகில் தன்னை தூக்கிக் வைத்துக்கொள்ளுமாறு பிரித்திகா காத்துக் கொண்டிருந்ததை பார்த்தாள். அவளை தூக்காமல் அவன் ஏன் உறைந்து போய் இருக்கிறான் எனப் புரியாமல் யோசித்தாள் சந்திரா.
Comments
Post a Comment
Share your thoughts!