NTR கதாநாயக்டு - ஒரு பார்வை
குறிப்பு: இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. ஆங்கில துணைத் தலைப்புகளும் இல்லை. இருந்தாலும் இது ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்பதாலும் திரைப்பட அனுபவத்திற்காகவும் பார்த்தேன்.
கதை: "நந்தமுரி தாரக ராமா ராவ்" எப்படி மக்கள் போற்றும் திரைக் கலைஞனாக உருவாகுகிறார் என்பதே "NTR கதாநாயக்டு".
NTRஆக அவரது புதல்வரும் நடிகருமான பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். வித்தியா பாலன் NTRரின் மனைவியாக அமைதியாக வந்து போகிறார். இவர்களைத் தவிர ஏகப்பட்ட நடிகர்கள் வந்து செல்கின்றனர்.
படத்தின் கலை வேலைகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக பழைய காலத்தில் பயன் படுத்திய சினிமா படப்பிடிப்பு இடங்கள், படத்தொகுப்பு செய்யும் இயந்திரம், படச்சுருள் என நம்மை கால பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள்.
"பெரிய நடிகர் ஆன பின்னரும் தன் பழைய நண்பர்களை சந்தித்து பட வாய்ப்பு தருவது, மக்களின் துயரங்களை கண்டு வருந்துவது, ஒரு குடிசை வீட்டில் பூஜை அறையில் தன்னுடைய கிருஷ்ணர் வேசம் படத்தை கண்டு NTR நெகிழ்வது" போன்ற காட்சிகளில் வசனங்கள் புரியவில்லை என்றாலும் அதன் உணர்ச்சிகளை உணர முடிகிறது. அதிலும் NTR கிருஷ்ணராக முதன் முதலில் தோன்றும் காட்சி சிலிர்க்கிறது.
NTR நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் தன்மையுடன் இருப்பது, அவரது சமகால நடிகரான நாகேஸ்வர ராவ்வுடன் இருந்த நட்பு போன்றவைகள் NTRயை கண்டு ஆச்சிரிய பட வைக்கிறது.
ஷாலினி பாண்டே, பிரணதி, ஸ்ரேயா, ஹன்சிகா, நித்திய மேனன், ரகுல் பிரீத்தி போன்ற பல தற்கால பிரபல நடிகைகள் அந்த கால பிரபல நடிகைகளாக வந்து செல்கின்றனர். அதில் நித்யா மேனனின் சாவித்திரி கதாபாத்திரமும், ரகுல் பிரீத்தியின் ஸ்ரீ தேவி கதாபாத்திரமும் மட்டுமே பரீட்சயம்.
படம் மூன்று மணி நேரம் என்றாலும் சுவாரசியமாக செல்கிறது. சில இடங்களில் பொறுமையாக திரைக்கதை நகர்ந்தாலும் அது வரலாற்றுத் திரைப்படத்திற்கே உரிய அமைப்பு என்பதால் பெரிய குறையாக தெரியவில்லை.
கீரவாணியின் பிண்ணனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் நிறைவாகவே இருக்கிறது.
NTRரின் சினிமா பயணத்தில் எந்த ஒரு சறுக்கலும் இல்லையா? அவர் மீது எந்த எதிர்மறை விமர்சனமும் இல்லையா? போன்றவைகளும் இருந்திருந்தால் இந்தபடம் தராசு எடையில் சமமாக இருந்திருக்கும். அவைகள் இல்லாததால் இந்த படம் "NTRரின் புகழ்"
என ஒரு பக்கமாக மட்டும் அதிகமாக சாய்ந்து இருக்கிறது.
இந்த படத்தின் கடைசி காட்சி, NTR அவர்கள் மக்கள் முன் மேடையில் "நான் கட்சி தொடங்க போகிறேன், கட்சியின் பெயர் தெலுங்கு தேசம்" என்ற அறிவிப்புடன் முடிகிறது. இதன் தொடர்ச்சி "NTR மகாநாயக்டு" என பிப்ரவரி 2019ல் வெளியாக இருக்கிறது.
மொத்தத்தில் "NTR கதாநாயக்டு" - ஆளுமையின் புகழ்.
#ntr #ntrkathanaygudu #review
Comments
Post a Comment
Share your thoughts!