இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தெருக்களில் "அகலு! அகலேய்....!" என வியாபாரிகளின் கூக்குரல், கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி விட்டத்தை சொல்லும் அறிகுறிகளின் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் எங்கள் ஊர் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் மரத்தேரும், பத்தாம் நாள் தீபத் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஐந்தாம் திருவிழாவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும். முதல் திருவிழாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திருவிழா கலைக் கட்ட ஆரம்பிக்கும். மரத்தேரின் போது திருவிழா அதன் உச்ச நிலையை தொட்டு இருக்கும். உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கும் அல்லது சொந்தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள்.
ஒன்பதாம் திருவிழாவன்று பல ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கான சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்து இருப்பார்கள். விடுமுறை கிடைக்காத திருவண்ணாமலை வாசிகள் எப்படியாவது தீபத்தை மட்டுமாவது பார்த்து விடவேண்டும் என அடித்து பிடித்து ஊரை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி இருப்பார்கள். தொலைக்காட்சியில் எல்லா சேனலில்களிலும் தீபத் திருவிழாவின் நேரலை குறித்த விளம்பரம் அப்பப்ப வந்துக் கொண்டு இருக்கும். பெரும்பாலான எல்லா விளம்பரங்களிலும் "எஸ். பி. பாலசுப்ரமணியம்" அவர்களின் "ஹர ஹர சிவனே..." பாடலே பின்னணியில் ஓடும். விளம்பரத்தின் இறுதியில் "திருவண்ணாமலை....திருக்காரத்திகை.... தீபத் திருவிழா.... நேரடி ஒளிப்பரப்பு.... காணத்தவறாதீர்கள்...." எனக் கனமான குரல் ஒன்று வார்த்தைகளை இழுத்து உச்சரித்துக் கொண்டு இருக்கும்.
எப்படி தீபாவளிக்கு 'குலோப் ஜாமுன் மிக்சை' அடிக்கி வைப்பார்களோ அதேபோல் தீப எண்ணெய் பாட்டிலை அனைத்து மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளும் அடிக்கி வைத்திருப்பார்கள்.
விடியற்காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல ஆரம்பித்து இருப்பார்கள். நேரம் செல்ல செல்ல வெளியூரிலிருந்து வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சி செய்தியின் மூலம் மக்கள் அனைவரும் பார்த்து மகிழ்வார்கள். அப்பொழுது இருந்தே மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலையின் மீது 6 அடி கொப்பரையில் ஏற்றப்படும் தீபத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஆரம்பித்துவிடும்.
14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல இயலாதவர்கள் மாடவீதியை மட்டும் சுற்றி வந்து விடுவார்கள்.
சென்ற வருடம் பயன்படுத்திய அகல் விளக்குகளை எடுத்துக் கழுவி வெயிலில் காய வைப்பது, பூஜை பொருட்களை கழுவுவது என சுத்தப்படுத்தும் செயல் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும்.
தீபாவளியின் போதே "இது தீபத்துக்கு" என பிரித்து எடுத்து வைக்கப்பட்ட பட்டாசுகளை பரணையில் இருந்து எடுத்து வெயிலில் காய வைப்பார்கள்.
வெளியூரில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் கார்களில் வருபவர்கள் தங்கள் கார்களை அரசு ஏற்பாடு செய்த நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு ஊருக்குள் வருவார்கள். சிலர் ஊருக்குள் கார்களை எடுத்து வந்து நெரிசலை ஏற்படுத்தி செய்வது அறியாமல் தவிப்பார்கள். பேருந்துகளிலில் வருபவர்களை ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் தற்காலிக பேருந்து நிலையத்திலேயே இறக்கி விடப்படுவார்கள். இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு பெரிதாக தடை ஏதும் இல்லை. அவர்கள் ஊரில் உள்ள தெருக்களில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் வண்டிகளை நிறுத்தி விட்டு கிரிவலம் செல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்படி அவர்கள் வண்டிகளை விடும் தெருக்கள் அனைத்தும் திரையரங்க பார்க்கிங்யை நினைவுபடுத்தும்.
"அக்கா கற்பூரம் வாங்கிங்க! அண்ணா கற்பூரம் வாங்கிங்க! அம்மா கற்பூரம் வாங்கிங்க! ஐயா கற்பூரம் வாங்கிங்க!" என ஒரு தட்டில் கற்பூரங்களை வைத்துக் கொண்டு 5 வயது முதல் 80 வயது வரையிலான பல தரப்பட்ட கற்பூர வியாபாரிகளின் குரல்கள் பிரதான சாலை முழுவதும் ஒலிக்கும். கிரிவலம் செல்லும் பக்தர்களை வாங்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பார்கள். "ரோட்டுக்கு ஓரமா நின்னு வியாபாரம் பண்ணுங்க, எதுக்கு நடுவுல வந்து நின்னு தொந்தரவு செய்யுறீங்கன்னு" அவர்களில் சிலர் காவல்துறையினரிடம் இருந்து திட்டும் வாங்குவார்கள்.
கிரிவலம் செல்லும் சாலையில் கடை வைத்து இருப்பவர்கள் தங்கள் வழக்கமான தொழிலை ஓரங்கட்டிவிட்டு "தேநீர் கடை, இட்லி கடை, லெமன் சோடா, தண்ணீர் பாட்டில், காலணி/லகேஞ் பாதுகாப்பு நிலையம்" போன்ற தொழிலில் இறங்கி இருப்பார்கள். அந்த ஒரு இரவு கண் விழித்து வியாபாரம் செய்தால் அவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள்.
அக்கம் பக்கத்து வீட்டில் இருந்து வழக்கமாக கேட்கும் குரல்களை தாண்டி வேறு சில புதிய குரல்களையும் கேட்க முடியும். அவர்கள் வெளியூரிலிருந்து வந்த சொந்தங்கள் ஆக இருப்பார்கள்.
மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கெல்லாம் அகல் விளக்குகளை தயார் செய்ய அனைவரும் ஆரம்பித்து விடுவார்கள். ஒரு செம்பருத்தி இலையில் எலுமிச்சம்பழம் அளவுக்கு மாட்டு சாணத்தை உருட்டி வைத்து அதன் மீது அகல் விளக்கை வைத்து அழுத்துவார்கள். அதன் பிறகு எண்ணெய் ஊற்றி திரிசல் போட்டு தயார் செய்வார்கள். ஆனால் இப்போது பெரும்பாலும் வெறும் அகல்விளக்கை வைப்பதை மட்டுமே பார்க்க முடிகிறது. மணி 5:30யை நெருங்கியதும் விளக்குகளை ஏற்றி வீட்டின் வாசல், சுற்றுச்சுவர், மாடியின் சுற்றுச்சுவரில் வைத்து வீட்டடையே அலங்கரிப்பார்கள். அந்த அகல் விளக்குகளின் எண்ணிக்கை ஒற்றை படையில் இருக்குமாறு தாய்மார்கள் கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.
அதுநாள் வரையில் மாவட்ட செய்தி பிரிவில் வந்து கொண்டிருந்த எங்கள் ஊர் அந்த நொடி முதல் நேரலையில் உலகம் முழுவதும் பார்க்கப்படும் பிரதான செய்தியாக மாறி இருக்கும். "நம்ம ஊரை டிவில காட்றாங்க!" என மக்கள் அனைவருக்குள்ளேயும் கொஞ்சம் கெத்தான உணர்வு இருக்கும். ஒவ்வொரு தொலைக்காட்சியின் நேரலையிலும் ஆன்மீகம் சார்ந்த ஒருவர் அண்ணாமலையார் கோயிலின் வரலாறையும் ஆன்மீக கதைகளையும் மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
5:45 மணிக்கெல்லாம் எல்லாரும் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பூஜைப் பொருட்களுடன் அண்ணாமலையாரை தரிசிக்க காத்துக் கொண்டிருப்பார்கள்.
கிரிவலம் சென்று கொண்டிருந்தவர்கள் அங்காங்கே ஓரமாக மலையை நோக்கி நின்று கொண்டிருப்பார்கள். அனைவரும் அந்த அழகிய தருணத்திற்காக மிகவும் பரவசத்துடன் மலை உச்சியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண காத்துக்கொண்டு இருப்பது போல் ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும்.
ஆறு மணி ஆனதும் மலையின் மீது இருந்து முதலில் லேசாக ஊதுபத்தியில் இருந்து வருவது போல் கரும்புகையும் அதனை தொடர்ந்து தீப ஒளியும் மக்களின் காட்சிக்கு தெரிய ஆரம்பிக்கும். அந்த நொடியில் மக்கள் அனைவரும் "அண்ணாமலைக்கு அரோகரா!" என கோசம் இட்டு தரிசனம் செய்வார்கள். ஒரு சிறிய பொட்டு போல தெரியும் அந்த தீப வெளிச்சத்தை அண்ணாமலையாரே காட்சி தருவதாக நினைத்து மக்கள் பிரார்த்தனையும் செய்வார்கள். தாங்கள் எடுத்து வந்த பூஜை பொருட்களைக் கொண்டு தீபாராதனை செய்வார்கள். கூடவே ஊர் முழுவதும் மணி ஓசையும் ஒருசேர ஒலிக்கும். அதே நேரத்தில் பட்டாசும் ராக்கெட்டுகளும் விண்ணை பிளக்க ஆரம்பித்திருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது ஒரு வீட்டிலாவது அவுட் எனச் சொல்லப்படும் ராக்கெட் வெடிகளை வெடிக்க வைத்திருப்பார்கள். அவை அனைத்தும் வானத்தில் வர்ணஜாலம் நிகழ்த்திக் கொண்டிருக்கும். அவரவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் சரவெடி, பூஸ்வானம், மத்தாப்பு போன்றவற்றை கொளுத்தி மகிழ்வார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இந்த குட்டி தீபாவளி தொடர்ந்துக் கொண்டு இருக்கும்.
ஊரே மொட்டை மாடியில் நின்று அண்ணாமலையாரை தரிசிக்கும்போது தங்கள் வீடு மட்டும் இன்னும் ஓட்டு வீடாகவும் குடிசை வீடாகவும் இருப்பதை எண்ணி சிலர் வருத்தப்படுவார்கள். சிலர் மொட்டை மாடி வீடு இருந்தும் அருகாமையில் இருக்கும் வீடுகளின் உயரத்தால் தீபத்தை தரிசிக்க முடியாமலும் வருத்தப்படுவார்கள். அவர்கள் தெருவில் நின்றோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று தீபத்தை தரிசிப்பார்கள்.
வீட்டில் தீபத்தை ஏற்றி விட்டு சொந்த பந்தகளுடனோ அல்லது தங்கள் நட்பு வட்டாரத்துடன் மக்கள் கிரிவலம் செல்ல ஆரம்பிப்பார்கள். சிலர் காலையிலேயே சென்று வந்து இருப்பார்கள்.
இருள் சூழ சூழ வீட்டில் ஏற்றப்பட்டிருக்கும் அகல் விளக்கின் வெளிச்சம் ஊரில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மஞ்சள் வண்ண சீரியல் பல்பு போட்டது போல இருக்கும். மறுநாள் வரையில் திருவண்ணாமலை தீபமே அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளிலும் தலைப்பு செய்தியாக இருக்கும். எத்தனை லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள்? மேலும் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் தீபம், திருப்பரங்குன்றம் கோயில் தீபம் போன்ற கூடுதல் செய்திகளும் காணக்கிடைக்கும்.
சில வருடம் மழையின் காரணமாகவோ அல்லது கடுமையான பனி மற்றும் மேகமூட்டத்தால் மலையின் மீது ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க முடியாமலும் போகும்.
இப்படி வருடா வருடம் கொண்டாடப்படும் தீபத் திருவிழாவானது இந்த வருடம் கொரோன நோய்த்தொற்று காரணமாக திருவிழாவின் பிரதான நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதனால் இந்தாண்டு திருவிழா நாட்கள் முழுவதும் திருவண்ணாமலை மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒன்றை இழந்தது போல இருந்துவந்தது.
மாட வீதியில் உலா வரும் சாமி விழாவிற்கு தடை, முக்கிய நிகழ்வான மரத்தேர் மற்றும் கிரிவலம் செல்லத் தடை போன்ற உத்தரவுகளால் இந்த திருவிழா நாட்கள் அனைத்தும் சாதாரண நாட்களை போலவே நகர்ந்து சென்றது. எல்லா திருவிழாவிற்கும் காலையிலும் இரவிலும் மாடவீதியில் வெவ்வேறு வாகனங்களில் காட்சி தரும் கடவுள்களை சென்று தரிசித்து வந்த பழக்கத்தின் காரணமாக இந்த வருடம் மக்கள் தினமும் மாட வீதியை மட்டும் சுற்றி வந்து பிராத்தனை செய்துக்கொண்டார்கள்.
இப்படி தீபத் திருவிழா என்னவோ போல இருந்த காரணத்தினால் திருவண்ணாமலை மக்களை திருப்தி அடைய செய்யப் போகும் ஒரே நிகழ்வு இன்று மாலை ஆறு மணிக்கு ஏற்படும் தீபத்தை தரிசிப்பது மட்டுமே.
அடுத்த தீபத்தன்று எந்த துயரங்களும் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே மக்களின் பிரதான வேண்டுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மக்களின் பிராத்தனை நிச்சயம் நிறைவேறும் என நம்புவோம்.
Tiruvannamalai Deepam Festival 2019 Photo Collections: ⬇️👇
Festival 2018 Photo Collections:
http://scienceplusmovies.blogspot.com/2018/11/tiruvannamalai-festival-2018_20.html?m=1
Comments
Post a Comment
Share your thoughts!