சினிமா சார்ந்து யூட்யூப் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் இயங்கி வரும் 'மிஸ்டு மூவிஸ்' குழுவிடமிருந்து வந்துள்ள இரண்டாவது புத்தகம் இந்த "பொஹிமியன்".
மற்ற மொழி படங்களின் அறிமுகமாக மட்டுமல்லாமல் சினிமாவின் கருத்தியல் மற்றும் கலை கோட்பாட்டையும் சேர்த்து 'ஐடியாலஜி' என்ற பெயரில் யூட்யூபில் பதிவிட்டு வந்தார்கள். அது சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. மேலும் சினிமா மீதான பார்வையை பலக் கோணங்களில் விரிவடையச் செய்தது. ரசிகர்கள் அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கும்போது அந்த பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் 'காப்பிரைட்' பிரச்சினை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது.
அப்படி மிஸ்டு மூவிஸின் 'ஐடியாலிஜி' பதிவுகளை காண ஆர்வமுடன் காத்திருப்பவர்களுக்கு எழுத்து வடிவில் கட்டுரைத் தொகுப்பாக இந்த புத்தகத்தை படைந்திருக்கிறார் அக்குழுவில் ஒருவாரான அப்துல் ரஹ்மான்.
"மிஸ்டு மூவிஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி" என ஆரம்ப பக்கத்தில் பார்த்த போது "நானும் சார்பட்டா பரம்பரை தான்"னு நினைத்துக்கொண்டு கட்டுரையின் தலைப்புகளை பார்த்தபோது எல்லாமே புதிதாக இருந்தது.
ஒவ்வொரு கட்டுரையும் சினிமாவை மட்டும் பேசாமல், கலை மற்றும் அதைச் சார்ந்து இயங்கிய கலைஞர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. கட்டுரைகள் அனைத்தும் தீவிரமான ஆராய்ச்சிக்கு பிறகு படைக்கப் பட்டுள்ளதை நன்றாக பார்க்க முடிகிறது. சில கட்டுரைகள் வெவ்வேறு நாட்டு பின்னணியிலும் பயணிக்கிறது.
சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கலைகள், அதை முன்னெடுத்த கலைஞர்கள், கலைஞர்களின் மனநிலை, உளவியல் சார்ந்த கோட்பாடுகள் எனப் பல நிலைகளில் இருக்கும் செய்திகளை நமக்கு வழங்குகிறார் ஆசிரியர். மேலும் அதைச் சார்ந்து உருவான படைப்புகள் மற்றும் திரைப்படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்படி ஒவ்வொரு கட்டுரையையும் படித்து முடித்த பின் இணையத்திற்கு சென்று அதைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது.
இடையில் ஆசிரியர் தன் தனிப்பட்ட சினிமாத் தேடலையும் சினிமாத்துறை தந்த அனுபவங்களையும் பகிர்கிறார். அச்சம்பவங்களையும் நம்முடனும் பொருத்தி பார்க்க முடிகிறது.
புத்தகத்தின் அட்டைப்பட ஓவியத்தை போல கட்டுரைகள் அனைத்தும் பல கலை அடுக்குகளை பொதிந்து வைத்துள்ளது.
மிஸ்டு மூவிஸின் முதல் புத்தகமான "இண்டிபெண்டன்ட் சினிமா" சுயாதீன திரைப்படத்தை பற்றியது. சுயாதீன திரைப்படங்கள் எப்படி உருவானது? யார் முன்னெடுத்தார்கள்? அதன் வளர்ச்சி போன்றவற்றை பற்றி விரிவாக பேசும். அதுமட்டுமல்லாமல் ஒரு சுயாதீன திரைப்படத்தை எடுப்பதற்கான வழிமுறைகளையும் தெளிவாக கொடுக்கப் பட்டு இருக்கும். இத்தனை அம்சங்களை கொண்டிருந்தாலும் அதில் இருக்கும் எழுத்து மற்றும் அச்சு பிழையின் காரணமாக அந்த புத்தகத்தை மறு வாசிப்புக்கு உட்படுத்த முடியாமல் போய்விட்டது. பெருமளவு குறைந்திருந்தாலும் அதே மாதிரியான தவறுகள் இந்த புத்தகத்திலும் தொடர்வது வருத்தம் அளிக்கிறது. சில இடங்களில் வரும் எழுத்து பிழைகள் வாசிப்பு ஓட்டத்திற்கு பின்னடைவைத் தருகிறது. சில இடங்களில் வாக்கிய அமைப்பு சிக்கலானதாக இருப்பதால் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
சில கட்டுரைகளில் வரும் செய்திகள், கோட்பாடுகள், சம்பவங்கள் சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு அருவெறுப்பையும் தரலாம். அது அவரவர்களின் பார்வையை பொறுத்தது.
ஒருக் கட்டுரையில் ஆசிரியர் பாலியல் வன்புணர்வு காட்சியை விவரித்து அதைச் சார்ந்து சில செய்திகளை பகிருகிறார். அந்த சம்பவத்திற்கும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை குறிக்கவும் ஆசிரியர் பயன்படுத்திய வார்த்தை தான் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இங்கு அந்த வார்த்தையை குறிப்பிட விரும்பவில்லை. அது மாதிரியான சம்பவங்களுக்கு அந்த வார்த்தை பொருளற்றதாகவும் கேவலமானதாகவும் இருக்கிறது என உணர்ந்து "பாலியல் வன்புணர்வு" அல்லது "பாலியல் பலாத்காரம்" எனப் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருந்தும் இன்றும் திரைப்படங்களிலும் 'மீம்'களிலும் அந்த பழைய வார்த்தையையே பயன்படுத்தி வருகிறார்கள். சாமானியர்களும் பொது இடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அந்த தவறை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு புத்தகத்தின் ஆசிரியர் அதைப் பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் சினிமாவையும் அதன் உள்ளார்ந்த கலையை பற்றியும் அருமையான உரையாடலை ஏற்படுத்துவது போல இருக்கிறது இந்த புத்தகம்.
'வெல்கம் டூ மிஸ்டு மூவிஸ்...'
'கம்படிமாஸ்'
புத்தகங்களை வாங்க;
1) பொஹிமியன்
2) இண்டிபெண்டன்ட் சினிமா
3) பொஹிமியன் + இண்டிபெண்டன்ட் சினிமா
Comments
Post a Comment
Share your thoughts!