நண்பர்களுக்கு திருமண பரிசாக எப்பொழுதும் புத்தகங்களை தருவதே வழக்கம். "எஸ்.ரா." அவர்களின் "காட்சிகளுக்கு அப்பால்" புத்தகத்தை மட்டும் பரிசாக பத்து நண்பர்களுக்கு மேல் கொடுத்து இருப்பேன். காரணம் அந்த புத்தகம் உலக சினிமாக்களை பற்றியது. சினிமா எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று, அதேபோல் எளிமையான புத்தகமும் கூட. இதனால் எளிதில் அனைவரும் வாசிக்க முயற்சி செய்வார்கள். அந்த புத்தகத்தின் சில பிரதிகளை புத்தக கண்காட்சிக்கு போகும்போதெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வேன். விலையும் பக்கங்களும் நூற்றுக்கு குறைவுதான்.
மற்ற எந்த பொருளை பரிசாக கொடுப்பதை காட்டிலும் புத்தங்களை தருவதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. புத்தகங்களை பெற்றவர்கள் உடனே படிக்கவில்லை என்றாலும் அவர்கள் வீட்டிலேயே பத்திரமாக இருக்கும். இடத்தை அடைக்காது. பின்நாளில் அவர்களோ அல்லது வேறு யாராவதோ கூட வாசிக்கலாம். வாசிப்பு உலகத்திற்கு ஒரு புதிய வாசகர் கிடைப்பார்.
29.10.2020 அன்று (நாளை) பள்ளி நண்பன் அரவிந்தின் திருமணம். மிக நெருக்கம் இல்லையென்றாலும் நீண்ட நாள் நண்பன். தமிழக வனத்துறையில் பணிபுரிகிறார். கையிருப்பில் இருக்கும் "காட்சிகளுக்கு அப்பால்" புத்தகத்தை அளித்து விடலாம் என முடிவு செய்து இருந்தேன். விஜய தசமி அன்று ஒரு யோசனை தோன்றியது. நான் பின்பற்றும் புத்தக விமர்சனம் சேனலான BookTag Forumல் காட்டைச் சார்ந்து எழுதப்பட்ட இரண்டு தமிழ் நாவலைப் பற்றிய அறிமுகம் நினைவிற்கு வந்தது.
யூடுப் சேனலுக்கு சென்று பார்த்தேன், அவைகள் "சாயாவனம் - சா. கந்தசாமி மற்றும் கானகன் - லட்சுமி சரவணக்குமார்". இந்த இரண்டு புத்தகங்களில் ஏதாவது ஒன்றை வாங்கி பரிசாக கொடுக்கலாம் என்று முடிவுசெய்து இணையத்தில் தேடினேன். எல்லா தளத்திலும் புத்தகம் கைக்கு வர ஒரு வாரம் வரை ஆகும் என்றிருந்தது. எங்கள் ஊரில் (திருவண்ணாமலை) இருக்கும் ஒரே புத்தகக் கடையான "அருணை புக் சென்டர்"லும் கேட்டுப் பார்த்தேன், கிடைக்கவில்லை. "வெண்ணிற இரவுகள்" கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம்.
"வெண்ணிற இரவுகள் அல்லது காட்சிகளுக்கு அப்பால்", இவற்றில் ஏதாவது ஒன்றை பரிசாக அளித்து விடலாம் என இறுதி முடிவு எடுத்திருந்தேன்.
மறுநாள் (நேற்று), தமிழில் காட்டை பற்றி வேறு எதாவது புத்தகம் இருக்கிறதா என தேடியபோது "ஜெயமோகன்" அவர்கள் எழுதிய "ரப்பர், காடு" போன்ற புத்தகங்கள் இருப்பதைக் கண்டேன். இதைத் தவிர வேறு எதாவது காடு சார்ந்த புத்தகங்களின் தகவலுக்காக நண்பர் மணிகண்டன் (ஒரு புத்தக கண்காட்சியில் அறிமுகமானவர்) அவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு மீண்டும் புத்தக கடையை நோக்கிச் சென்றேன். "ரப்பர், காடு" புத்தகங்களை வர வைத்து தருவதாக சொன்னார். எனக்கு உடனே ஒரு புத்தகம் வேண்டும் என்பதால் என் நோக்கத்தை கூறி, காடு சார்ந்து வேறு ஏதாவது புத்தகங்கள் தற்சமயம் இருக்கிறதா? எனக் கேட்டேன்.
"காடோடி" என்ற புத்தகத்தை தந்தார். கொஞ்சம் பெரிய புத்தகம், விலை ₹300. நல்ல புத்தகம் என கடையின் உரிமையாளர் புத்தகத்திற்கு உத்திரவாதம் அளித்தார். இருந்தும் சிறிது தயக்கம். கொஞ்சம் படித்துப் பார்த்து நாமே முடிவு செய்துவிடலாம் என புத்தகத்தின் பின் பக்க அட்டையில் இருந்த வரிகள், முன்னுரையில் சில வரிகள் மற்றும் நடு பக்கத்தில் சில பத்திகளை படித்துப் பார்த்தேன். படித்த வரையில் புத்தகத்தின் ஆசிரியர் உலகெங்கிலும் உள்ள காட்டிற்கு மேற்கொண்ட பயணக் கட்டுரையின் தொகுப்பை நாவல் வடிவில் படைத்திருப்பது போல தெரிந்தது. முக்கியமாக எழுத்து நடை சிறப்பாகவே இருந்தது. ₹20 கழிவுடன் புத்தகத்தை வாங்கி விட்டேன். விட்டிற்கு வந்தவுடன் நண்பரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அவரும் நான் வாங்கியிருந்த அதே புத்தகத்தின் பெயரையே அனுப்பி இருந்தார். புத்தகம் கிடைத்த செய்தியையும்நன்றியையும் தெரிவித்தேன்.
இன்று 28.10.2020 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக திட்டம். அதனால் அதுவரையில் எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு பக்கங்களை படித்து பார்க்கலாம் என முடிவு செய்து நேற்று இரவு படிக்க ஆரம்பித்தேன்.
ஆசிரியர் சில உள்ளூர் வாசிகளுடன் "கினபத்தாங்கன்" காட்டிற்குள் (இந்தோனேஷியா தீவு) பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவர் சேகரித்த செய்திகள், அனுபவம் மற்றும் சில கசப்பான உண்மைகளை அழகான நடையில் பதிவு செய்திருந்தார். ஆங்காங்கே வரும் கலகலப்புமும் உவமைகளும் வாசிப்பில் அயர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டது.
முதல் அத்தியாயம் படித்து முடித்தவுடன் ஆசிரியருடன் காட்டுக்குள் சென்று வந்த அனுபவம் ஏற்பட்டது.
அதன் பிறகு இன்று இரண்டு அத்தியாயங்களை படித்தேன். இந்த புத்தகத்தின் தீவிரமும் முக்கியத்துவமும் நன்றாக புரிந்தது. இந்த புத்தகத்தை பொறுமையாகவும் அதே சமயம் இணைய வசதி கொண்ட கைபேசியை அருகில் வைத்துக்கொண்டு படிப்பதே சிறந்த முறையாகும். ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியர் அவர் கண்ட வித்தியாசமான மரம், விலங்கு, பறவை, நில அமைப்பு போன்றவைகளை அழகாக நம் கண்முன்னே விவரிக்கிறார்.
பறக்கும் தவக்களை, பிக்மி யானை, இருவாசிப் பறவைகள், மழைக்காடுகளை பற்றிய செய்திகள், காட்டை அழிக்கும் மனிதனின் செயல் என "இயற்கை, சூழ்நிலையியல், வியாபாரம்" என பல தளங்களில் பயணிக்கிறது.
இன்று மாலை நண்பர் அரவிந்த் பெறப்போகும் பரிசில் நிச்சயம் இந்தக் "காடோடி" தனித்துவமானதாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. குமுதா ஆப்பி!
அதேபோல் பின்நாளில் இந்த புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து வைத்திருக்கிறேன்.
Goodreadsலும் "Want to Read" என தட்டி விட்டிருக்கிறேன்.
Comments
Post a Comment
Share your thoughts!