நாலு மணிக்கு எந்திரா!
எங்கள் வீட்டின் மாடியில் நின்றால் புகழ் திரையரங்கில் ஓடும் படத்தின் ஒலியை தெளிவாக கேட்க முடியும்.
அன்று மாலை பள்ளி மற்றும் tuitionயை முடித்துவிட்டு வீட்டின் மாடியில் நின்று படத்தின் சப்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன்.
அனைத்து பாடல்களையும் ஏற்கனவே பாட்டு புத்தகத்தை வாங்கி மனப்பாடம் செய்து இருந்தேன். படத்தில் எந்த பாடல் எப்பொழுது வருகிறது என்பதையும் வசனங்களையும் கேட்டுக்கொண்டே அன்றைய பொழுதையும் ஏக்கத்தையும் கழித்தேன்.
மறுநாளும் பள்ளி இருந்ததால், அன்று மாலை ஆறு மணி காட்சிக்கே வீட்டில் அழைத்துச் சென்றார்கள்.
நான் ரஜினி ரசிகன் ஆவதற்கு "சிவாஜி" படமே அடித்தளம் இட்டது.
திரையரங்கில் இரண்டு முறையும்
CDல் முப்பது முறையும் பார்த்து இருப்பேன். பின்னாளில் அதே படத்தை 3Dல் வெளியிட்டார்கள். அதையும் திரையரங்கில் பார்த்து இருக்கிறேன்.
எப்படியாவது "எந்திரன்" படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே ஆகவேண்டும் என்று இருந்தேன். படம் வெளியான நாட்களில் தேர்வு விடுமுறை இருந்ததால் படத்திற்கு தனியாக முதல் நாள் காட்சிக்கு செல்ல வீட்டில் அனுமதி அளித்தார்கள். அப்போது என்னுடைய வகுப்பு நண்பன் அருணும் ஆர்வமாக இருந்தான். இருவரும் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டை வாங்க இரண்டு நாட்களாக முயற்சி செய்துக் கொண்டு இருந்தோம். "சென்னா கிருஷ்ணன்" என்ற எங்கள் நண்பன் திருவண்ணாமலை மாவட்ட ரசிகர் மன்றத்து நிர்வாகிகளை தெரிந்து வைத்துள்ளதாகவும் அவன் மூலம் டிக்கெட்டை வாங்கி விடலாம் என்றும் கேள்விப்பட்டோம். மாலை 7 மணிக்கு ராஜன் துணிக்கடை தெருவுக்கு நானும் அருணும் சென்றோம். சென்னா கிருஷ்ணன் எங்களுக்காக காத்துக்கொண்டு இருந்தான். எங்களை அங்கே இருந்த complexக்குள் அழைத்து சென்றான். அங்கே மாவட்ட தலைவர் போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். எதிர்முனையில் இருந்தவர் 15 டிக்கெட்கள் வேண்டும் என்று கேட்டு இருக்க வேண்டும். அவர்களின் உரையாடல்கள் மூலம் யூகித்தேன்.
ரசிகர் மன்றம் டிக்கெட் எல்லாம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும், நமக்கு எல்லாம் கிடைக்காது என்ற எண்ணம் அந்த நொடி வரை இருந்தது. அவர் போனை வைத்தவுடன் சென்னா கிருஷ்ணன் எங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி இவர்களுக்கு தான் இரண்டு டிக்கெட் வேண்டும் என்று சொன்னான். அவரும் கட்டில் இருந்து இரண்டு டிக்கெட்டை எழுந்து நின்று சிரித்த முகத்துடன் எங்களுக்கு கொடுத்தார். MLA சீட்டு வாங்கியது போன்றதொரு உணர்வு.
வெளியே வந்து நண்பனிடம் பணத்தை கொடுத்து விட்டு நன்றி தெரிவித்தோம்.
காலை 7 மணி காட்சிக்கு வீட்டில் இருந்து விடியற்காலை 4 மணிக்கே நானும் அருணும் சைக்கிளில் கிளம்பி விட்டோம். Tuitionக்கு கூட இவ்வளவு விரைவாக கிளம்பியதாக வரலாறு இல்லை.
நாங்கள் தான் முதல் ஆளாக இருப்போம் என்று பார்த்தால் எங்களுக்கு முன்னாடியே சில ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவர்கள் போல இருந்தார்கள். எல்லாம் ரஜினிகாந்த் என்னும் ஆளுமையின் சக்தி.
பின்னாளில் என் சினிமா ரசனை பல மாறுதல்களை சந்தித்தது.
ஒரு நடிகராக கவர்ந்த ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் களத்தில் அந்த அளவுக்கு என்னை ஏனோ கவரவில்லை.
அவரின் நல்ல எண்ணத்திற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.
தமிழ் சினிமாவை ரசித்து கொண்டாடியவர்கள் அனைவரும் நிச்சயம் "Super Star ரஜினிகாந்த்" என்னும் காந்த சக்தியை உணராமல் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது.
மகிழ்ச்சி!
Camera: Nokia Xpress Music
Comments
Post a Comment
Share your thoughts!