சமோசா பாயும் பையாவும் தேரடி வீதியில் TVS XLலில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது எனது வலது புறத்திற்கு எதிரே கொஞ்சம் தூரத்தில் இவர் வந்து கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்து பார்த்து. வருகிறேன் சட்டென ஒரு யோசனை, இவரை ஏன் ஒரு புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தோன்றியது. உடனே வண்டியை இடது பக்கம் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, வண்டிக்கு பூட்டு போட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு சாலையை கடந்தேன். புகைப்படம் எடுப்பதை அவர் பார்த்து விட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று தயங்கினேன். அதனால் பின் பக்கமாக இருந்து எடுக்கத் திட்டமிட்டேன். அவருக்குப் பின்னால் மூன்றடி இடைவெளி விட்டு பின்தொடர செய்ய ஆரம்பித்தேன். வேகமாக போனை அன்லாக் செய்து கேமராவை ஆன் செய்து பிரேமை வைத்தேன். அதே மூன்றடி இடைவெளியுடன் அவரின் வேகத்திற்கு இணையாக நடந்துகொண்டே ஒரு படம் எடுத்தேன். எடுக்கும்போதே தெரிந்தது, படம் சிறப்பாக அமையவில்லை. அடுத்த படத்திற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நொடி அவர் பூம்புகார் துணியகத்தை கடந்துக்கொண்டு இருந்தார். அந்நேரம் கடையில் இருந்து தாய்மார்கள் இருவர் வெளியே வந்துகொ...