நவிரம் - சிறுகதை. சீரான இடைவெளியில் மண்ணில் பாதி புதைந்திருந்த ரப்பர் டயர்களின் மீது மழலைகள் தாவியாடிக் கொண்டிருந்தார்கள். தொங்கும் கயிறு பாலம், மரப்பாலம், லாரி டயரினால் செய்யப்பட்ட குகை என பல வித்தியாசமான விளையாட்டுகளும்; ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கூண்டு, சீ-சா போன்ற வழக்கமான விளையாட்டுகளும் இருந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்டு இருந்த அனைத்து விளையாட்டுகளிலும், குழந்தைகள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்கள். அவர்களை தங்களின் கண் பார்வையிலேயே இருக்கும்படி பெற்றோர்கள் அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டார்கள். மழைநீர் சேகரிப்பு, மக்கும்-மக்காத குப்பை, டெங்கு ஒழிப்பு, நடைப் பயிற்சியின் பயன்கள், மனிதன் நிலவில் கால் பதித்த காட்சி, சூரியக் குடும்பம், கிரகணங்கள், மயில் வடிவில் இருக்கும் மாவட்டத்தின் வரைபடம் என பலப் படங்கள் பூங்காவின் சுற்று சுவர் முழுவதும் ஓவியமாக வரையப்பட்டு இருந்தது. ஆங்காங்கே போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்ச் அனைத்திலும் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளுடன் வந்தவர்களாகவும் சிலர் வேடிக்கை பார்த்து பொழுதை போக்க வந்தவர்களாக...